கோவை ரத்தினபுரி, பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 10 பவுன் தங்க நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் துறையினர் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பைக்கில் வந்த வாலிபர்கள் முகமூடி அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.




இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் பிடிக்க உதவி ஆணையர் கணேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கோவை பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலாங் யாசர் ஜாபிரி (24), தானே பகுதியை சேர்ந்த பிரதேமேஷ்(24), மத்திய பிரதேசம் சேர்ந்த சமீர் சிக்கு(24), ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி சேக்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில், உசேன் அலியை விபத்தில் சிக்கிய நிலையில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரயிலில் கோவைக்கு வந்து பைக்குகளை திருடி, அவற்றை கொண்டு நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், பின்னர் பைக்குகளை விட்டு விட்டு ரயிலில் சொந்த ஊர்களுக்கு சென்றதும் தெரியவந்தது. 




இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ மகாராஷ்டிராவில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் 4 பேரும் கோவை வந்துள்ளனர். ‌பின்னர் அங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 3 பைக்குகளை திருடியுள்ளனர். அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ரயில் செல்லும் வழியில் உள்ள தர்மபுரி, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் ரயிலில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மலாங் யாசர் ஜாபிர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. தற்போது, உசேன் அலி சேக் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனக் கூறினார்.