கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்த குமார் இருந்து வருகிறார். இவரது தம்பி குமார் மணியகாரன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின்னர், கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மேயர் கல்பனாவின் தம்பி குமார் சில ஆவணங்களை எரித்ததாக வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியுள்ளது. வீடியோ காட்சிகள் வெளியானதுடன் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் எரிந்த நிலையில் உள்ள காகித்தத்தில் 60 இலட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, மூன்று மாதம் கழித்து கிரயம் செய்த பின்னர் காசோலையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என உறுதி கூறுகிறேன் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் பணபரிவர்த்தைக்கான ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைபடம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து மேயர் கல்பனாவின் தம்பி குமாரிடம் கேட்ட போது, ”இது தவறான தகவல். குப்பைகள் மட்டுமே எரிக்கபட்டது. ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே குமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண்யா என்பவர் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது துடியலூர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். அதில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தங்காமல், தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மேயர் கல்பனா தங்கியிருக்கும் அந்தக் காம்பவுண்டில் நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேயர் கல்பனா இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த காம்பவுண்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது சரண்யா குற்றம் சாட்டியிருந்தார்.
சரண்யா வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்த நிலையில், அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் புகார் தெரிவித்த கோபிநாத் சரண்யாவின் கார் மர்மமான முறையில் எரிந்தது. மேயர் கல்பனாவின் குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது குமார் ஆவணங்களை எரித்ததாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.