கோவை புறநகர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.


கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பரவலாக வட கிழக்கு பருவ மழை பெய்தது. தற்போது பருவ மழை ஓய்ந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குளிர் நிலவி வருகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில், இரவு நேரங்களில் பனி பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வெள்ளலூர், நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே இருப்பவை எதுவும் தெரியாத அளவிற்கு, வெண் திரை போல பனி மூட்டம் இருந்தது.




அதேபோல சாலைகளில் சாலையே தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து இருந்தது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. மேலும் பிரதான சாலையில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக சேலம் - கொச்சின் புறவழிச் சாலை, நஞ்சுண்டாபுரம், போத்தனூர், வாளையார், தொண்டாமுத்தூர், நரசிபுரம், மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விவசாய பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் விவசாய பணிகள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில், அதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது.




இதேபோல நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தொடங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண