ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதால், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.


கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இத்திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 506 கிராமங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். 


பி.ஏ.பி என அழைக்கப்படும் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு, பாலாறு படுகைகள் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு, பாலாறு ஆறுகள் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.  பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. பி.ஏ.பி. திட்டத்தில் நீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.


இதனிடையே ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து, பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.




பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது எனவும், ஆழியார் அணை நீரை கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு மாற்றுத் திட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில் ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதால், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முருகேசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொள்ளாச்சி பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண