கோவை மாநகராட்சி பகுதியில் 8 குளங்கள் உள்ளன. இக்குளங்கள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. குளக்கரையில் நடைபாதை, பொழுதுபோக்கு, அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம், பெரிய குளம் மற்றும் வாலாங்குளம் ஆகியவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. குளக்கரைகள் அழகுபடுத்தபட்டாலும், குளத்தில் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்கின்றது. குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் முறையாக பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தாலும், கழிவுகள் கலப்பதாலும் இந்த இரு குளங்களிலும் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றது. மேலும் குளங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தின் கரையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊசிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், நகரின் மையப் பகுதியில் உள்ள குளத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து உக்கடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வாலாங்குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. போதிய ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மீன்கள் செத்து மிதப்பதால் தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து கழிவு நீர் கலந்துவருவதே மீன்கள் உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல கடந்த மாதமும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் மீன்களை அகற்றினர். மீண்டும் அதேபோல மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இந்த சுகாதார சீர்கெடு நிலவுவதால் இறந்த மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் போன்றவற்றை அழகுபடுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றனர். குளக்கரையை அழகுபடுத்துவதில் உள்ள கவனத்தை குளங்கள் மீது காட்டவேண்டும். கழிவு நீர் கலப்பதும், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதும், மீன்கள் செத்து மிதப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஸ்மார்ட் சிட்டியில் குளங்கள் ஸ்மார்ட்டாக இல்லை. குளங்கள் குப்பைத் தொட்டிகள் இல்லை என்பதை உணரவேண்டும். கழிவுநீர் கலப்பதை , கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மீன்களை அப்புறபடுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.