கோவை அருகே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடிக்கிறது. தற்போது வரை ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 347 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்றுப் பரவல், கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கும் பரவி வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு தன்னார்வலர்களும், தன்னார்வ அமைப்பினரும் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிவர் சங்கத்தினர் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர். அன்னூர் பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டருக்குள் உள்ள மக்கள் உதவும் வகையில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை முகாம்களுக்கு செல்லவும், குணமடைந்தவர்கள் வீடு திரும்பவும் இந்த ஆட்டோ சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கியுள்ளார்.
இதுகுறித்து அவ்வமைப்பை சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், “அன்னூர் பகுதியில் எங்களது அமைப்பு சார்பில் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி வந்தோம். தற்போது அன்னூர் பகுதியிலும் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் தொற்று பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட அளவில் கடந்த 7 நாட்கள் தொற்று பாதிப்பு அன்னூர் வட்டாரத்தில் 2.72 சதவீதமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களை உறவினர்கள் கூட ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது. ஊரடங்கு காரணமாக மருத்துவமனைகளுக்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. ‘கவலைப்படாதீங்க. உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்பதை வெளிக்காட்டும் வகையில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளோம். எங்களது அமைப்பை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மூலம் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவும், குணமடைந்தவர்கள் வீடு திரும்பவும் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த ஆட்டோ சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் கூடுதல் ஆட்டோக்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது அன்னூர் பகுதி மக்களுக்கு உதவிகரமாக அமையும்” என அவர் தெரிவித்தார்.