தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. நகரப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புறங்கள் மற்றும் மலைக்கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும், 14 வகையான பொருட்களும் பேரூதவியாக அமைந்துள்ளன. ஆனால் ஏராளமான பழங்குடிகள் ரேசன் அட்டை இல்லாததால், அந்த உதவிகளை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர்.




இதுகுறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ் பேசுகையில், "கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட ஆனைமலைத் தொடர் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதியில் வாழும் 35  பழங்குடி கிராம மக்கள்  கோவிட் பெருந்தொற்றால் நேரிடையாகவும், மறைமுகமாகவும்  பாதிக்கப்பட்டுள்ளனர். அடர்ந்த வனத்திற்குள் உள்ள இக்கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை, போக்குவரத்து வசதி கிடையாது.  மின்சாரம் வசதியோ, மருத்துவ, பலசரக்கு கடை வசதிகள் இங்கு கிடையாது. இப்பகுதியானது ஆனைமலை புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் ஊரடங்கில் யாரும் எளிதில் பிற பகுதிகளுக்கு சென்று வர  முடியாது. 




இங்கிருக்கும் அனைத்து கிராமங்களில் உள்ள மொத்த  குடும்பங்களில் சுமார்  10 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் அரசின் குடும்ப அட்டைகள் இல்லாமல் உள்ளன. குறிப்பாக சர்க்கார்பதி (5/27), நாகரூத்து (9/50), கூமாட்டி (7/37), எருமைப்பாறை (3/37), மாவடப்பு (12/120), குழிப்பட்டி (20/120), காட்டுப்பட்டி (8/36), கல்லார் (4/23) உடுமன் பாறை (3/36), திருமூர்த்தி நகர் (17 /110), கீழ் பூனாட்சி (4/45) காடம்பாறை (4/14) மற்றும் கோபால்பதி புது காலனி (7/23)  குடும்ப அட்டை இல்லாத நிலை உள்ளது. இது போன்ற நிலை ஆனைமலை தொடரில் நிலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில பழங்குடியின கிராமங்களில் 40 சதவீதம் வரை ரேசன் அட்டை இல்லாத நிலையும் உள்ளது.




தலைமுறை தலைமுறையாக காடுகளில் இவர்கள் வாழ்வதாலும், கொரோனா நெருக்கடியால் கடந்த ஒன்றரை வருடங்களாக புதியதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இ சேவை முறையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை செய்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பழங்குடி தனிப்பெண்கள் பலருக்கும் ரேசன்கார்டு பெற இயலாத நிலை உள்ளது.  




ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ள பழங்குடிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி என்பது ஒரு பெரிய தொகை. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் தமிழ்நாடு  அரசு பொருளாதாரத்தில் ஏழ்மையில் வாடும் மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் பிற பழங்குடிகளுக்கு தாயுள்ளத்தோடு உதவ வேண்டும். முறையாக கணக்கெடுத்து அரசின் உதவிகள் பெற ஏதுவாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக  குடும்ப அட்டை வழங்குவதோடு, கொரோனா நிவாரண உதவிப்பணமும், பொருட்களும் வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குரலற்ற சமூகமாக உள்ள பழங்குடிகள் மீது தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.


பழங்குடியின கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், சிகிச்சைக்காக வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பரிசோதனை மருத்துவ உதவிகள் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.