கோவையில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் 90 சதவீத அரசு பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கத்தினர் இன்றும், நாளையும் என இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 90 சதவீத பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 




குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். காலை நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், வேலைக்குச் செல்லவும் முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் உரிய நேரத்திற்கு பள்ளி மற்றும்  வேலைகளுக்கு செல்ல முடியவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதே வேளையில் தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. ஆட்டோக்கள் 40 சதவீதம் இயக்கப்பட்டு வருகிறது. 




கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளா மாநில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதேபோல் கேரளாவில் இருந்து கோவைக்கு கேரள  பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதேபோல கோவையிலிருந்து மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சொற்ப எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முழுமையாக கலந்து கொண்டிருப்பதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் பொதுமக்கள் இப்படியே அடிக்கடி வேலை நிறுத்தம் செய்தால் எப்படி என கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 13 இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். 


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண