கோவை மாநகராட்சி பகுதியில் சுகாதார மையங்கள், புதிய சாலைகள் அமைத்தல் உட்பட 9.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  14 திட்டங்களுக்கான பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார். முத்தண்ணன் குளக்கரையில் புதிய சாலைகள் அமைக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ”கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளுக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்து வருகின்றார். சாலை பணிகள்,  63 சுகாதார கட்டிடங்களுக்கு 15.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.


8.18 கோடிக்கு ஏற்கனவே பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று 7.14 கோடி ரூபாய்க்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. குப்பை எடுக்க கூடுதல் வாகனங்கள் வாங்க 105 வாகனங்களுக்கு 7.50 கோடி நிதிக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்கள். கோவை நகரில் பொதுவான மின்வெட்டு என சொல்லக்கூடாது. ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட்டு இருக்கும். மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த காலங்களை போல் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க 625 கோடி மதிப்பில் 8905 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு 96 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இன்னும் 4 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் இணைப்பு வழங்கப்பட வேண்டியிருக்கின்றது” என அவர் தெரிவித்தார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு, “சுய விளம்பரத்திற்காக பேசுபவர்களுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என அவர் பதிலளித்தார்.


இதையடுத்து சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “படித்தவர்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வேலை தேடுபவர்களுக்கும், வேலை கொடுப்பவர்களுக்கும் இடையே பாலமாக அரசு இருந்து ஏற்பாடுகள் செய்து வருகிறது. வேலை வாய்ப்பில் ஒருவர் இரண்டு நிறுவனங்களில் பணி நியமனம் பெற வேண்டாம். இதனால் மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.


ஒரு நிறுவனத்தில் மட்டும் பெற்றால், இன்னொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியினர் என்றாலும், வித்தியாசம் பார்க்காமல் முதலமைச்சர் வளர்ச்சித் திட்டங்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார். முதலமைச்சர் நல்லாட்சி வழங்கிக் கொண்டுள்ளார்” என அவர் தெரிவித்தார்.