உதகை அருகே புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது மண் சரிவு ஏற்பட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட 6 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிய அனுமதியின்றி நடைபெறும் இது போன்ற கட்டுமான பணிகளின் போது, அவ்வப்போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உதகை அடுத்த லவ்டேல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்க்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 6 பெண்கள் உட்பட 10 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் 10 பேரும் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.




இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மண்சரிவில் சிக்கியிருந்த 8 பேரையும் மீட்டனர். இருப்பினும் இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ராதா (வயது 38), பாக்கியம் (வயது 36),
முத்துலட்சமி (வயது 36), உமா (வயது 35), சங்கீதா (வயது 30) மற்றும் சகிலா (வயது 30) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜெயந்தி (வயது 56), சாந்தி (வயது 45), தாமஸ் (வயது 24) மற்றும் மகேஷ் (வயது 23) ஆகிய நான்கு நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த
வேதனையடைந்தேன் எனவும்,  இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும்
உத்தரவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்
கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.