கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. 


இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த கார் வெடிப்பிற்கு வெடி மருந்துகளை ஆன்லைனில் வாங்கியது தெரியவந்ததை அடுத்து, ஆன்லைன் மூலம் வெடி மருந்து பொருட்கள் வாங்குபவர்களை காவல் துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதேபோல ஆன்லைனில் வெடி மருந்துக்கு பயன்படும் வேதி பொருட்கள் வாங்குபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிய கோவில்பட்டியை சேர்ந்த இளைஞரும் கோவையைச் சேர்ந்த இளைஞரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தில் சிக்கினர்.


கடந்த மே மாதம் 13 ஆம் தேதி கோவை குரும்பபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பிளிப் கார்ட்டில் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம் மற்றும் சல்பர் 100 கிராம் ஆகியவற்றை ஆர்டர் செய்து அதே மாதம் 20ம் தேதி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை போலீசார் இந்த மாதம் 19 ஆம் தேதி செந்தில்குமாரை அலைபேசியில் அழைத்து விசாரணை செய்து கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு நேரடியாக அழைத்து விசாரணை செய்தனர்.


இந்த விசாரணையில் செந்தில்குமார் பொருட்களை தான் வாங்கவில்லை என்றும், தான் பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள தண்ணீர் பந்தல் அருகில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பழைய வியாபாரம் செய்து வருவதாகவும், எனது கடையில் பணிபுரியும் மாரியப்பன் என்பவர் தான் எனது செல்போன் மூலம் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மாரியப்பன் மீது கொலை முயற்சி கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் தனது எதிரியான மகாராஜன் என்பவரை குண்டெறிந்து கொள்ள முயற்சி செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் வாங்கியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சரவணம்பட்டி காவல் துறையினர் மாரியப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண