பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் தொகுதி வளர்ச்சி குறித்து கோரிக்கை மனு அளித்தார்.  அதில் “பொள்ளாச்சி நகராட்சியில் 35வது வார்டில் உள்ள ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் 35 மற்றும் 36 வது வார்டைச் சேர்ந்த 1300 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதற்கு 100 அடி சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் பல்நோக்கு மையம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்நோக்கு மையம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் திறவியம் என்று லேஅவுட் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு வேறு எங்கும் இடம் இல்லை. எனவே மேற்கண்ட இடத்திற்கு முன் அனுமதி வழங்கி பல்நோக்கு மையம் கட்டிடம் கட்டுவதற்கு உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 


கிணத்துக்கடவு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சி தாசன் நாயக்கன்பாளையம் கிராமத்தில் ஊர் கட்டு விநாயகர் கோவில் மயான கரைச் செல்லும் சாலை முதல் மெட்டுவாவி செல்லும் வரை தார் சாலை அமைத்து தர வேண்டும். கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சி, வடசித்தூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் முதல் வெள்ளேகவுண்டன் புதூர் சாலை வரை ஈரடுக்கு மெட்டல் சாலை அமைத்து தர வேண்டும். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சேர்வக்காரன் பாளையம் ஊராட்சி எஸ் குமாரபாளையம் செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும். கிணத்துக்கடவு ஒன்றியம் முள்ளம்பாடி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் முதல் காளியண்ணன் புதூர் செல்லும் சாலையை தார் சாலை அமைத்துதர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.




இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி முழுவதும் தென்னை விவசாயம் சார்ந்த பகுதி தேங்காய் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். நடைபெற்றுக் கொண்டிருந்த கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 150 ரூபாய் 95 பைசாவிற்கு கொள்முதல் செய்து வந்ததை நிறுத்தி விட்டார்கள். எனவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் கொப்பரை கொள்முதலை துவங்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையில் தேங்காய் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பொள்ளாச்சி சுற்றுவட்டார விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளோம். 


அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு ஒப்பந்தம் கோரிய பணிகள், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல பொள்ளாச்சி மேற்கு புறவழிச் சாலை பணி பாதி நடந்த நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கணிக்கன் பட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பூர்த்தியாகாமல் அப்படியே நிலுவையில் கிடக்கிறது. இதுபோன்ற நிற்கும் வேலைகளை அரசியல் நோக்கம் இன்றி விரைந்து முடித்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் செய்து தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண