உதயநிதி ஸ்டாலினை 'பிளே பாய்' என விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

”பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட உள்ளனர். 80 வயது ஆனாலும், 80 படம் எடுத்தாலும், 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளே பாயாக தான் இருப்பார்”

Continues below advertisement

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நமது நிலம் நமதே என்ற பெயரில் குழு  அமைத்து  அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்னூர் - ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அண்ணாமலை, “திமுகவினர் கொள்ளைபுறமாக வருவது வழக்கம். அப்படித்தான் அன்னூர் பகுதியில் 3867 ஏக்கர் நிலத்தை சிப்காட்டிற்கு எடுப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர். திமுகவினர் வியாபாரம் செய்ய, அரசியல் இலாபம் பெற சென்னை வந்தவர்கள். சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிட்டு இருந்தால் மானம், ரோசம் இருக்கும். அது விவசாயிகளிடம் உள்ளது. விவசாயிகள் பற்றி புரிந்து கொண்டவர் காமராஜர் மட்டுமே. அணை கட்டி பல இடங்களில் விவசாயிகளை வாழ வைத்தவர்.


அன்னூரில் தரிசு நிலமென சொல்லி விவசாய நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். அடிமுட்டாள்கள் சேர்ந்து கோபாலபுரத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அன்னூர் விவசாயிகள் பணக்காரர்களாக வேண்டும் என விரும்பவில்லை என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு கணக்குப்படி 48195 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகள் அமைக்க கையக்கப்படுத்தப்பட்ட நிலங்கள் உள்ளது. ஆனால் அங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. நாங்குநேரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்திய போதும், அங்கு ஒரு நிறுவனம் கூட வரவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு 27 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லியை விட தமிழ்நாட்டிற்கு வந்த அந்நிய முதலீடு குறைவு. அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? திமுக பித்தலாட்டம் செய்கிறது. தண்ணீரை வியாபாரம் செய்ய படையெடுத்து வந்துள்ளனர்.  திராவிட மாடல் அரசிற்கு தேவை உங்கள் நிலம் அல்ல. தண்ணீருக்காக தான் வருகிறார்கள். ஜி ஸ்கொயர் என்ற ஆளுங்கட்சி நிறுவனம் அரபு நாடுகளுக்கு சென்று 578 கோடி பணம் கொடுத்து ரேகிண்டோவிற்கு சொந்தமான பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள நிலத்தை வாங்கியுள்ளார்கள். திமுகவின் பாதி பணம் ஜி ஸ்கொயருக்கு தான் செல்கிறது. ஜி ஸ்கொயருக்காக தான் திமுக வேலை செய்து கொண்டுள்ளது. 


ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, இன்னொரு புறம் டாஸ்மாக் திறந்து வைப்பது தான் திராவிட மாடல் அரசு. நிலங்களை அபகரித்து விவசாயிகள் வாழ்வாதாரம் அழித்து ஜி ஸ்கோயர் போன்ற நிறுவனத்துக்கு நிலத்தை எடுத்து தருகிறார்கள். சென்னை முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளது. முதலமைச்சர் சுகாதார துறை அமைச்சரிடம் கலகத்தலைவன் படம் பார்த்தீர்களா என கேட்பது வெட்கக்கெடு. 

பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட உள்ளனர். 80 வயது ஆனாலும், 80 படம் எடுத்தாலும், 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளே பாயாக தான் இருப்பார். மகன் படம் எடுப்பது குறித்து தான் முதலமைச்சர் அக்கறை காட்டுகிறார். விவசாயிகள் பற்றி முதலமைச்சர் கவலைப்படவில்லை. படத்தில் நடிக்க அவர் காக்கி சட்டையை வாடகைக்கு எடுத்து போட்டார். நான் பத்தாண்டுகள் காவல் துறையில் வேலை செய்தவன். காக்கி சட்டை அணிய தகுதி வேண்டும். படம் நடித்தால் மக்கள் காவலனாக கனவில் மட்டுமே ஆக முடியும்.  ஆடிக்காரை வைத்து கொண்டு திமுக கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு டெல்லிக்கு சென்று போராடும் விவசாயிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


கேரள அரசு தேனி மாவட்டத்திற்குள் சர்வே நடத்தி கொண்டிருக்கின்றனர். 80 ஏக்கர் விவசாய நிலங்களை கேரள அரசு எடுத்து விட்டது. 2024 ல் எலும்பு துண்டு எதாவது கிடைக்குமா, துணை பிரதமர் பதவி கிடைக்குமா என்ற நட்பாசையில் முதலமைச்சர் கேரள அரசு தேனி விவசாயிகள் நிலத்தை எடுத்து விட்டு விட்டார். காசி தமிழ் சங்கத்திற்கு சென்று வந்தவர்கள் திமுக சொல்லிய பொய்யை உணர்ந்துள்ளார்கள். பொய் அரசியலை 70 ஆண்டு காலமாக செய்து வந்ததை ஒரு காசி தமிழ் சங்கம் காலி செய்து விட்டது. மத்திய அரசுக்கு போட்டியாக மாநில அரசு காசிக்கு 200 பேரை அனுப்புகிறார்கள். அவர்களை குளிர் காலத்தில் காசிக்கு அனுப்பாமல் வெயில் காலத்தில் அனுப்புங்கள்.

டெல்லியில் இருக்கும் மோடி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டைப் பற்றி யோசிக்கிறார். அன்னூரில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க முயன்றால், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் ஆரம்பிப்பேன். எத்தனை நாட்களாக இருந்தாலும் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை எடுக்க முடியாது. தைரியம் இருந்தால் ஒரு பிடி மண்ணை எடுத்து பார். மானமும், ரோசமும் இருக்கும் அரசிற்கு ஒழுங்காக பேசினால் புரியும். இந்த அரசிற்கு ஈகோ அதிகம். இது மக்களுக்கான அரசல்ல. கார்ப்பரேட்களுக்கான அரசு. திமுக கூட்டணி கட்சிகளை போல நாங்கள் அடிமையல்ல. திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகள்.

பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்து விட்டது. எத்தகைய தாக்குதலை திமுக தொடுத்தாலும் 2024 தேர்தலில் 25 எம்.பி.க்களை பெற போவது உறுதி. சிறைக்கு செல்ல பாஜக தொண்டர்கள் பயப்பட மாட்டோம். ஒரு இலட்சம் கோடி ரூபாயை பணமாக வைத்திருக்கும் திமுகவை எதிர்க்கிறோம். சாதாரண மனிதராக இருந்து கொண்டு காண்டாமிருகத்தை எதிர்த்து கொண்டிருக்கிறோம். 70 ஆண்டுகளாக எழுதிய வரலாறை மக்கள் ஆதரவோடு சுக்குநூறாக்கி கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola