கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், யார் யாரை சந்தித்துள்ளார்கள், வெடி மருந்து வாங்கியது உள்ளிட்டவை குறித்து 5 பேரையும் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.




இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினி கைப்பற்றப்பட்டது. ஆன்லைனில் வெடி மருந்துகளை அப்சர் கான் வாங்கிக் கொடுத்தது தெரியவந்ததை அடுத்து, அப்சர்கானை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.


இதனிடையே கைது செய்யபப்ட்ட 5 பேரிடம் காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து 3 நாட்கள் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதையடுத்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வசிக்கும் அப்துல் மஜீத் என்பவர் உயிரிழந்தவர் ஜமேசா முபின் என்பதை அடையாளம் காட்டினார் எனவும், அப்துல் மஜீத் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை வசித்து வாடகைக்கு வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடந்த கோவிலுக்கு அருகே ஒரு மாதம் முன்பு வரை வசித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ரியாஸ் முதலில் போன் விபரம் கூறியதும், ஆனால் தன்னை கைது செய்து தன் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாகவும், ரியாஸ், நவாஸ் இருவரும் தான் சம்பவம் நடந்த இடத்தை காவல் துறையினருக்கு தெரிவித்து அவர்கள் வர உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விரைவில் புலன் விசாரணையை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண