கோவை அருகே நீட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்த மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மகன் ஸ்ரீ ஆகாஷ். கடந்த 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதுவதற்காக கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆகாஷ் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது ஆகாஷின் அலறல் சத்தம் கேட்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.


உடலில் தீக்காயங்களுடன் ஆகாஷை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 80% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆகாஷ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், கோச்சிங் சென்டரில் நடத்தப்படும் பயிற்சி தேர்வில் மாணவன் ஆகாஷ் குறைவான மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்றதாக பெற்றோரிடம் மதிப்பெண்களை மாற்றி தான் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக கூறியுள்ளார். இதனை அறிந்த ஆசிரியர்கள், பெற்றோர் கோச்சிங் சென்டருக்கு நேரில் வர வேண்டும் என ஆகாஷிடம் கூறியதால் அவர், பெற்றோருக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக் கூடும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)