கோவை மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதி வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவையில் சுற்றுவட்ட சாலை அறவிப்பை 2007 ல் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது வெளியிட்டார். 2009 ல் திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் தொய்வடைத்தது. இங்குள்ள பெரும்பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, இந்த மேற்கு புறவழிச்சாலை பணியை முதன்மையாக செய்ய சொன்னார்கள். அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் மேற்கு புறவழிச்சாலை பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரளாவில் இருந்து வரும் பெரும்பான்மையானவர்கள் மாநகருக்குள் வராமல் நீலகிரிக்கு செல்ல முடியும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்த புறவழிச்சாலை பணிகள் 3 கட்டமாக செய்ய இருக்கின்றோம். முதற்கட்டமாக மதுக்கரை-மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும் போதே 2 ஆம் கட்ட பணிகளுக்கு 95% நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும். இந்தியா குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக அறிக்கை கொடுத்து இருக்கின்றேன். சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த பகுதிகளில் மேம்பாலம் பணிகள் வேண்டும் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்ததால், இந்த சிங்காநல்லூர், சாய்பாபா காலனி பாலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தவிர்க்க முடியாத காரணத்தினால், சாலை பணிகளுக்கு விவசாயம் நிலங்கள் ஒரு சில இடங்களில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
செம்மொழி மாநாடு கோவையில் தான் கலைஞர் நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அதிமுக தான் கிடப்பில் போட்டார்கள். ஆனால் அதிமுக விட்டு சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். மேட்டுப்பாளையம் சக்தி சாலை 4 வழி சாலையாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். கோவையை திமுக அரசு புறக்கணிக்க வில்லை. தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. எல்& டி சாலையில் அவர்களுடைய ஒப்பந்த காலம் முடிந்தவுடன் மாநில அரசு அந்த சாலையை கையைகப்படுத்தி 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.