கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மணிக்கூண்டு கோவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. கோவை நகராட்சி தலைவராக பதவி வகித்த ஏ.டி. திருவேங்கடசாமி முதலியார் நினைவாக 1928-ஆம்  ஆண்டில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. பராமரிப்பு இன்றி இருந்த இந்த மணிக்கூண்டு கோபுரத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் CREDAI பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் முத்துசாமி, “டவுன்ஹால் மணிக்கூண்டு 1928ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதற்கு முன்பு விளக்குகள் எல்லாம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அனைவரும் நின்று பார்த்து செல்லும் வண்ணம் வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் சார்பாக அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


இது அடையாளமாக மட்டுமல்லாமல் பழைய கால கட்டிடங்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக கூட அமைந்துள்ளது. இது போன்ற கட்டிடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த கடிகாரம் அன்றைக்கு லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பொருத்தப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் பல்வேறு புதிய வாய்ப்புகளை கொடுக்கிறார். முதலமைச்சர் ஒவ்வொரு துறையையும் கடமையாக எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்கிறார்.


முன்பெல்லாம் முதலமைச்சர் மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொள்ளும் போது நாங்கள் சாதாரணமாக நினைத்தோம். ஆனால் நடைமுறையில் முதலமைச்சர் ஆய்வுக்காக ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் அங்குள்ள பணிகள்  துரிதப்படுத்தப்படுகிறது.




ஏற்கனவே வேகமாக நடைபெற்று வரும் பணிகள் முதலமைச்சர் வரும்போது, இன்னும் வேகமாக குறித்த காலத்தில் முடிக்கப்படுகிறது. கோவைக்கும் ஆய்வு மேற்கொள்ள விரைவில் தேதியை கொடுக்க இருக்கிறார். அப்போது கோவைக்கு மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்டம் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஒரு முன் உதாரணமாக இருக்கும். குடிநீர் பிரச்சினைகள் போன்றவை எல்லாம் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள பிரச்சினைகள். எனவே அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் அந்த பணிகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.


கோவை மாஸ்டர் பிளான் திட்ட பணிகளுக்கு தனியாக கமிட்டி அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளானில் மொத்தமாக 135 இடங்கள் இடம் பெற்றுள்ளது. மாஸ்டர் பிளானில் 7 சதவிகிதமாக இருந்ததை தற்பொழுது 19% முடித்துள்ளோம், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 22 சதவிகிதம் எட்ட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது.


தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் பேசி முடிவு எடுப்பார்கள். நிச்சயமாக அவர்களுடைய பிரச்சனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை அரசு நிச்சயமாக கவனிக்கும். தொண்டாமுத்தூர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினால் அதனை உடனடியாக ஒப்படைக்க முடியும் என்று கூறுகிறார்கள். நாளைய தினம் இது குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொள்கிறோம். சிறுவாணி அணை நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அமைச்சரிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.