கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா நடைபெற்றது. கடந்த 26 ம் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் இந்த கோடை விழா நடைபெற்றது. இதில் வனத்துறை சார்பில் புலி சிறுத்தை மற்றும் வனவிலங்குகளின் உருவ பொம்மைகள் இடம்பெற்றன. மேலும் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. பரதநாட்டியம், மிருதங்கம் வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோடை விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


வால்பாறை கோடை விழா நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சாரம், ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு கேடயம் மற்றும் உதவி தொகைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வால்பாறை கோடை விழா 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் ஆட்சியில் மிக சிறப்பாக 3 நாட்கள் நடைபெற்றது. 10 ஆண்டுகள் நிறுத்தப்பட்டு இருந்த கோடை விழா மீண்டும் நடைபெற அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு வால்பாறை பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். வால்பாறையில் இனி வருடம் தோறும் கோடை விழா நடத்தப்படும். 


வால்பாறை பகுதியை பொருத்தவரை 35 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் நிதி பெற்று விரைவாக முடிக்கப்படும். வால்பாறை நகராட்சி அனைத்து வளர்ச்சிகளையும் பெற்ற நகராட்சியாக வளர்ச்சி பெற அனைத்து நிதி உதவிகளையும் முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார்” எனத் தெரிவித்தார்.


கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கல்குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும், இதற்கு கரூரை சேர்ந்த நபர்கள் வண்டி ஒன்றுக்கு 400 ரூபாய் வீதம் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு, “தவறான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க வேண்டாம். விவசாயிகளிடம் ஆதாரம் இருந்தால் கொடுங்கள், பதில் சொல்கிறேன். கல்குவாரிக்கும் கரூரைச் சேர்ந்தவர்களும் என்ன சம்பந்தம்? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் பார்த்து தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கிறேன். வருமானவரித்துறை ரெய்டுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆதாரமே இல்லாமல் தொலைக்காட்சி போட்டிக்காக யூகங்கள் அடிப்படையில் கேள்விகள் கேட்க வேண்டாம்” எனப் பதிலளித்தார். கரூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இன்று நான்காவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண