இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்பட குழுவினரான நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்யா, “மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா அவர் பாணியில் கூறியிருக்கிறார். காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம்” எனத் தெரிவித்தார்.
அந்த படத்தில் இடம்பெற்றுள்ள "அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு" என்ற வசனம் தொடர்பான கேள்விக்கு, ”நல்லிணம் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை என தான் நினைக்கிறேன். படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்த படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர் மற்றும் பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு கிராம கதைக்களத்தில் ஆக்சன் திரைப்படம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. அதனால் தான் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டு கொண்டதால், தான் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
பேன் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் போது பல மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள். அப்போது அதில் கிடைக்கும் வரைவேற்பை பொறுத்து அது பேன் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது. அடுத்து எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். சார்பட்டா 2 திரைப்படத்திற்கான கதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும். இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிதான் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சித்தி இத்னானி, ”இந்த திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கனமான, முக்கியாமன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமைக்குரியது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்