கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17.87 கிலோ மீட்டர் தொலைவிற்கு 89 தார் சாலைகள் போடப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக  ரூபாய் 6 கோடி மதிப்பில் 14.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு 54 தார் சாலைகள் மேம்பாட்டு பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”தமிழக முதல்வர் கோவை மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை பராமரிப்பிற்காக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கியுள்ளார். அந்த நிதியைக் கொண்டு முதல் கட்டமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் 10 இடங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்க கூடிய பணிகள் என்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவாக இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி உள்ளேன். கோவை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த காலங்களில் எந்த விதமான சாலைகளும் புதுப்பிப்பது அல்லது புனரமைப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லை.


கிராமசபை நிகழ்ச்சிக்கு முதல்வரின் அறிவுரைப்படி சென்ற போது, மக்கள் குறிப்பாக சாலைகள் மிக மோசமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படவில்லை. எனவே உடனடியாக அந்த பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பணிகள் நிறைவேற்றுவதற்காக முதல்கட்டமாக 6 கோடி ரூபாய்க்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலைகளில் அடுத்தடுத்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறும்.




கோவை மாவட்டத்தில் மேம்பாலப் பணிகளை பொறுத்தவரை நிறைய வழக்குகள் உள்ளன. குறிப்பாக அந்த வழக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைத்துப் பேசி, அதில் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களையும் அழைத்து பேசி ஒரு சுமூக உறவு ஏற்படுத்தப்பட்டு மேம்பால பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தொடங்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் வழக்குகளின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பொது மக்களிடம் முறையாக கருத்து கேட்காமல் அவருடைய உணர்வுகளுக்கு எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.


செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. முதல்கட்டமாக அமைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்று எட்டு மாதம் தான் ஆகிறது. முதல்வர் தொடர்ந்து கோவை மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக கோவையில் வரலாற்றில் ஒரே மேடையில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் முதல்வரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது. அனைத்து திட்டங்களும் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்டமாக கோவை மாறும்.




கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சாலைகள் மிக மோசமாக உள்ளது எனவும் பல்வேறு இடங்களில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சாலையை சீரமைக்கவும், குடிநீர் சீராக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோவை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் முதலமைச்சருக்கு உறுதுணையாக இருந்து, மக்கள் பணியாற்ற கூடியவர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதற்கு தயாராக உள்ளனர். வளர்ச்சி முக்கியம் மக்கள் அதற்கான தேர்வுகளை தேர்வு செய்ய தயாராக உள்ளனர்” என அவர் தெரிவித்தார்.