கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் அரசு பேருந்து மீது லாரி மோதி  விபத்துக்கு உள்ளான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை என்ற பகுதி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 




அப்போது சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் அரசு பேருந்து சென்ற போது, எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்திற்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகிய 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 25 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சிறுமுகை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேருந்து மீது லாரி மோதும் பதபதைக்க வைக்கும் விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






 


அந்த சிசிடிவி காட்சியில், சாலையோரமாக பேருந்து வந்து கொண்டிருக்கிறது. அப்போது ஏதிரே இருந்த வளைவில் இருந்து சுமையுடன் வந்த லாரி ஒன்று கடந்து சென்றது. பின்னால் சுமையுடன் இரண்டாவதாக ஒரு லாரி வந்தது. அந்த லாரி வந்த வேகத்தில் வளைவில் திருப்பும் போது, ஏதிரே வந்த கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துள்ளானது. இதில் சாலையோரத்தில் இருந்த கடை மீது பேருந்து சாய்ந்து விழுகிறது. உடனடியாக அங்கிருந்த மக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்க ஓடி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.  
 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண