கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.


காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றினர். காவல் துறை செக்போஸ்ட் இருந்ததால் அதை தாண்டி தப்பி ஓட முயன்ற போது சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இது தீவிரவாத தாக்குதல் என்பதை ஒப்புக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பா... வலியுறுத்தியும்கூட காதில் விழாத மாநில அரசு, காவல்துறை இந்த விபத்து ஏதோ சிலிண்டர் வெடித்தது போலவே ஒரு ஜோடனையை செய்து கொண்டுள்ளனர். பின்னர், அந்த இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை. கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல்” எனத் தெரிவித்து இருந்தனர்.



இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.


கோவையில் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன. அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.