தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
முன்னதாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இன்று கோவை மாவட்டத்திற்கென முதல்வர் 18 கோடியே 45 லட்சம் மதிப்பிலான ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளார். வரக்கூடிய காலத்தில் மிதமுள்ள பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. மதுபானக் கடைகள் இடமாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது. அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடலாம்.
சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால் கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வரப்பட்ட நிலையில், 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடர்ந்து செயல்படும்” என அவர் தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் பகுதிகளில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் திறப்பு குறித்து கேட்ட கேள்விக்கு "நாளை சந்திப்போம்" எனவும், சிலர் தாங்களாகவே திறந்து கொள்வோம் என கூறி வருவதற்கு அவ்வாறு திறந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் பதிலளித்தார். வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ”சுற்றுலா துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு கட்டணம் குறைவிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரக்கூடிய காலங்களில் கோவை மாவட்டத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளார். அதேசமயம் இன்றைய தினம் மேலும் 45 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் அரசு உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.