கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஸ்கை ரோபோட் எனப்படும் தானியங்கி ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இந்தியா முழுவதற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வரும் நிலையில், இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சோதனை அடிப்படையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்த பட்டன. கோவை விமான நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் ஆகியோர் இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களை தொடங்கி வைத்தனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த அதிநவீன ரோபோக்கள் மூலம் தேவையான தகவல்களை பயணிகள் பெற முடியும். இரண்டு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் மூலம் பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்கும். விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் செல்லும் வழி, கழிவறை, உணவுகூடம் என பயணிகள் செல்ல வேண்டிய வழிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேட்டியளித்த கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், “ஸ்கை ரோபோட் இன்று முதல் சோதனை அடிப்படையில் விமான நிலைய வளாகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிக உதவியாக இருக்கும். பயணிகளுக்கு தேவையான தகவல்களை இந்த ரோபோ வழங்கும். இந்த ரோபோக்களில் 3 மொழிகள் வரை பயன்படுத்த முடியும். தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த ரோபோ பயணிகளின் சேவைக்காக சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.
பெங்களூர் விமான நிலையத்திற்கு அடுத்து கோவை விமான நிலையத்தில் இது மாதிரியான ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் இதில் என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பது சோதனை அடிப்படையில் பின்னர் முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்