நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் கடந்த 4 ம் தேதியன்று பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அப்போது வெள்ளலூர், அன்னூர், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் மோதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவினர் இரண்டு தரப்பினராக பிரிந்து மோதிக் கொண்டதால், தேர்தல் ஒத்திவைக்கபட்டது. இன்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக வேட்பாளர் பரமேஸ்வரன் போட்டியின்றி பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் உயர் நீதிமன்ற தடை காரணமாக நடைபெறவில்லை. 




வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். சுயேட்சை வேட்பாளர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததால், திமுகவின் பலம் 7 ஆக உயர்ந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மருதாசலம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். துணைத் தலைவர் பதவிக்கு கணேசன் போட்டியிட்டார். கடந்த முறை நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது, திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு வாக்குப்பெட்டிகள் அலுவலகத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மறைமுகத் தேர்தல் மீண்டும் நடைபெற்ற நிலையில் மீண்டும் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.




தேர்தல் நடைபெறும் இடத்திற்கு திமுக, அதிமுக தொண்டர்கள் திரண்டனர். காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல் துறையினர் தடுப்புகளை மீறி திமுகவினர் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி அப்பகுதியில் நின்றிருந்தவர்களை விரட்டினர். இதில் 4 வது வார்டு திமுக கவுன்சிலர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமார் மண்டை உடைந்தது. இதேபோல மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.




இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் இருந்த ஒரு கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே பலத்த பாதுகாப்புடன் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண