கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப் பகுதியில் சந்தன மரம் கடத்திய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகம் அமைந்துள்ளது. சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட NES RF காப்புக் காட்டில் ராமர் (60) என்பவர் கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணி அளவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்து விட்டார் என ஸ்ரீரங்கன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல் துறையினர் சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பெத்திகுட்டை பிரிவு வனவர், வனப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கண்ட கருப்பசாமியை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான கூத்தாமுண்டி தெற்கு சுற்றுக்கு உட்பட்ட தும்புபள்ளம் என்ற இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த நபர் ராமர் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இதையடுத்து கருப்பசாமியிடம் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கருப்பசாமி, ராஜ்குமார், ராமர் ஆகியோருடன் கடந்த 21 ம் தேதியன்று கோத்தகிரிக்கு உட்பட்ட பங்களா குழி எனும் இடத்தில் தனியார் எஸ்டேட்டில் திருட்டுத் தனமாக சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.. பின்னர் சுமார் 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தன மரம் கடத்தலின் போது உயிரிழப்பு நேர்ந்ததால் வெளியே கூறினால் காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்த தகவலை வெளியே கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமுகை காவல் நிலையத்திற்கு வந்து தகவல் கூறியதை அடுத்து, ராமர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.