கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு வரும் மக்களின் அடிப்படை தேவைகள், வாகன நிறுத்துமிடம், கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெகு விரைவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் திருப்பணிகள் துவங்கப்பட உள்ளது.
1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதான கோவில்களைப் பாதுகாக்கும் வகையில் 2022-23 ம் ஆண்டு சட்டப்பேரவை பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 104 திருக்கோவில்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் பல புராதான கோவில்களை திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு நிதியை எதிர்பார்க்கிறோம். ஆன்மிகவாதிகள் சிறப்புறும் ஆட்சியில், நிதி தரப்படும் என எதிர்பார்க்கிறோம். புராதான கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கப்படும்.
மருதமலை கோவிலுக்கான ரோப் கார் திட்டத்திற்கு கடந்த 5 ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட உடன், உடனடியாக இப்பணிகள் துவங்கும். மருதமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கோவில்களுக்கு அருகே குப்பை கொட்டப்பட்டால், உடனுக்குடன் அகற்றும் பணியை இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும். பக்தர்களின் உபாதைகளை களைய அனைத்து நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும். கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பாலியல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ”யார் தவறு செய்தாலும் எங்களின் கவனத்திற்கு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக துறை சார்ந்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு புகார் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பேரூர் தர்பனம் மடம் அமைக்கும் பணிகள் 80% முடிந்து விட்டது. அரசு சார்பில் சிவராத்திரி விழா கடந்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு பெரு வாரியாக வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு ஒரு கோவில் என்பது 5 கோவிலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருநெல்வேலி, தஞ்சை, கோவை என 5 திருக்கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து சிவராத்திரி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பழுத்த மரத்தில் தான் கல் அடி படும் என்பது போல், திமுக அரசு மீது பழிபோடப்படுகிறது. எந்த ஆட்சியிலும் செய்யாத சாதனைகளை முதலமைச்சர் செய்து வருகிறார். 407 கோவில்களில் குட முழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 1500 கோவில்களில் 1000 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. 14500 திருக்கோவில் ஒளி வீச முதலமைச்சர் காரணம். இதனை ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் இல்லாதவர்கள் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். கோவில்களை பாதுகாக்க வரும் தடைக்கற்களை, படிக்கற்களாக இந்த ஆட்சி மாற்றி வருகிறது. ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது. அரசின் நிதியை இந்து சமய அறநிலையத் துறைக்கு தாராளமாக முதலமைச்சர் வழங்குகிறார். இந்த ஆட்சியில் நடப்பது போல எந்த காலத்திலும் திருப்பணிகள் நடக்கவில்லை. இதனை விஞ்சும் பணிகளை முதலமைச்சரால் தான் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.