அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களைக் கொண்டுள்ளது, கோவை குற்றாலம். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது. 


கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். இயற்கை ஏழில் கொஞ்சும் மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.


போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலத்தில், சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை குற்றால அருவிக்கு செல்ல சின்னார் சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 30 ரூபாயும், இருசக்கர வாகனம் நிறுத்த 20 ரூபாயும், கார்கள் நிறுத்த 50 ரூபாயும் கட்டணமாக வனத்துறையினர் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டண வசூலில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.




நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில் இரண்டு மெஷின்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுவதும், அதில் ஒரு மிஷினில் பதிவு செய்யப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை  மட்டுமே அரசுக்கு செல்லும் வகையில் பதிவு செய்யபட்டுள்ளது.  மற்றொரு மெஷினில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியும், அந்த தொகையினை கணக்கு காட்டாமல் வனத்துறை அதிகாரிகளே எடுத்துக் கொண்டு பண முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் வனத்துறையினர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நுழைவு கட்டணம் வழங்கியதில் மோசடி நடந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போளுவாம்பட்டி வனவர்  ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். வனவர் ராஜேஷ்குமாரிடம் இருந்து 35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் வனச்சரகர் சரவணனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண