கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் மேடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ”கலைஞர் கருணாநிதி தான் படிக்கும் காலத்தில் இருந்தே சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர். கடலில் கருணாநிதியின் பேனா சிலையை வைப்பதற்கான பணிகளை தமிழக அரசு முன்னெடுத்த போது, தமிழ் துரோகிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றம் சென்று பேனாவை கடலில் வைக்கலாம்  என்ற தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் பெற்று தந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.


மேலும் சிதம்பரம் கோவிலில் உள்ள நந்தியின் வரலாறு குறித்து குட்டி கதை கூறிய அமைச்சர் பொன்முடி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நந்தனார் வகுப்பைச் சேர்ந்த இறையடியார் சிதம்பரம் கோவிலுக்கு சென்ற போது, உயர் வகுப்பினர் சிலர் தடுத்து நிறுத்தியதால் அங்கிருந்த நந்தி நகர்ந்து நின்று இறைவனைக் காண வழி விட்டதாக வரலாறு இருப்பதாகவும், அப்போது இறைவன் நந்தனரை கோயிலுக்குள் அழைக்காமல் விட்டதே சமூகநீதி பிரச்சனைகளுக்கு காரணம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வுக்கு விளக்கு கோரி திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தபோது அதனை அதிமுகவினர் விமர்சித்தனர். மாநாட்டில் உணவை குப்பையில் வீசியவர்களுக்கு மக்கள் மீது மதிப்பில்லை.


பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் செல்வது மதக் கலவரங்களை தூண்டி விடுவதற்கு தான். நட்பாக பழகி வரும் சமூகத்தை கெடுக்கவே இதனை அண்ணாமலை செய்து வருகிறார். சந்திராயன் கூட நிலவில் கால் தடத்தை பதித்து விட்டது. ஆனால் மணிப்பூர் வன்முறைக்காக இதுவரை மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. மத பிரச்சனையை தூண்டும் பாஜக அரசை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசுவையில், இஸ்ரோ நிலவில் கால் பதித்திருப்பது வரவேற்கக் கூடியது எனவும், இதில் முக்கிய பங்கு வகித்த வீர முத்துவேல், தன் சொந்த ஊரான விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் சந்திரயான் 3 நிலவில் கால் பதித்தது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்  கிடைத்த வெற்றி வெற்றி எனவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றிக்கு முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் எனவும், அதோடு விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான சேர்களை சிறுவர்கள் தூக்கி வந்து ஒழுங்கமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த  காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


'யானைகளின் சூப்பர் ஸ்டார் செங்களூர் ரங்கநாதன்’ ; ஆசியாவின் மிக உயரமான யானையின் உருக்கமான கதை!