கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 569 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.


இதற்கு முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, “முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேசும் போது மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டுமென தெரிவித்தார். அதனைத் தான் நான் முதல்வன் திட்டம் மூலம் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இது பெண்கள் பல்கலைக்கழகமா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவிற்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக பட்டம் பெறுகின்றனர். 




இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வியில் உயர்ந்து இருக்கிறோம். கல்வி, சுகாதாரம் ஆகியவை முதலமைச்சரின் இரண்டு கண்கள். அதனால் தான் இத்துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். கோவை தொழில் முனைவோர்கள் வளர வேண்டிய இடம். மாணவர்கள் படிக்கும்போதே, தொழிற்பயிற்சி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று பெண்கள் ஆர்வமாக படித்து வருகின்றனர். அதுதான் திராவிட மாடல். பெரியார் மண். 53 சதவீதம் உயர்கல்வியில் உயர்ந்து இருக்கிறோம். தமிழ் வழியில் படித்த சிவன் அகில இந்திய அளவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. விரும்புபவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி விருப்ப பாடமாக இருக்க வேண்டும். இந்தி கட்டாயம் என இருக்க கூடாது. சர்வதேச மொழி ஆங்கிலமும், உள்ளூர் மொழி தமிழும் இருக்கிறது. இந்த இரண்டு மொழிகள் தான் கட்டாயம். இந்தி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் கோவையில் பானிபூரி விற்பவர்கள் எல்லாம் யார்? அது ஒரு காலம். எந்த மொழியை கற்கவும் தயாராக உள்ளோம். மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தியை கட்டயமாக்கக்கூடாது. 




புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்படும் தமிழ்நாடு கல்விக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை, மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மத்திய அரசிடம் தெரியப்படுத்த வேண்டும். இதனை ஆளுநர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன். ஆளுநர் வேந்தராக உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்களை மேற்கொள்ளும் போது உதவுவார் என நம்புகிறோம். கல்லூரியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவித்த ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் தான். அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டுமென்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். வாழ்க்கையில் உயர படித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.