வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் விதிமீறல் ; ஈரோடு இளைஞர் சிபிஐ அதிகாரிகளால் கைது

அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட கட்டுப்பாடுகளை மீறி, தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெறுவதாகவும், அதற்காக உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கைமாறி வருவதாகவும் புகார் எழுந்தது.

Continues below advertisement

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட (எப்.சி.ஆர்.ஏ) விதிமுறைகளை மீறி முறைகேடு செய்து இருப்பது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டது. நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட், இமச்சால பிரதேசம், தெலுங்கனா, ஆந்திரா, தமிழ்நாடு, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் இந்த சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகாஷ் என்பவரை அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த வாகாஷ் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோவிந்தராஜன் உத்திரவிட்டார். மேலும் வாகாஷை வருகின்ற 13 தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் உத்திரவிட்டார். கைது செய்யப்பட்ட வாகாஷை அழைத்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லி புறப்பட்டனர்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பல தொண்டு நிறுவனங்கள், சேவை செய்தவற்கு பயன்படுத்தாமல் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி, சில தொண்டு அமைப்புகள் தங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட கட்டுப்பாடுகளை மீறி, பல தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற்று வருவதாகவும், அதற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறி வருவதாகவும் புகார் எழுந்தது. 

உள்துறை அமைச்சக ஊழியர்கள், தன்னார்வலர்கள், இடைத்தரகர்கள் இணைந்து கூட்டாக மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 36 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 6 அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை  சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 3.21 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola