கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக பள்ளி நேரங்களில் இயக்கப்பட்ட கூடுதல் அரசு பேருந்திற்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து, பூசை செய்து வரவேற்றனர். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது எண். 4 வீரபாண்டி பேரூராட்சி. இப்பேரூராட்சியில் 11 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை சுமார் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்ல பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை பொறுப்பு அமைச்சரும், வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சருமான முத்துசாமியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளி நேரங்களில் மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார். இதன் பேரில் உடனடியாக காலை, மாலையில் பள்ளி நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடியும் நேரத்தில் ஒரு நகர பேருந்து அப்பகுதிக்கு வந்தது. அப்போது பள்ளி வளாகத்தில் பேருந்துக்கு முன்பாக பட்டாசு வெடித்தும், பூசை செய்தும் பேருந்தை பேரூராட்சி நிர்வாகத்தினரும், பள்ளி மாணவ, மாணவியரும் வரவேற்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் பேரூராட்சி தலைவர் பத்மாவதி ஆகியோர் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை இருந்தது எனவும், தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்த 48 மணி நேரத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் முத்துசாமிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.