கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினார். இதில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம் பிரதம மந்திரியின் உணவு சார்ந்த குரு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் உட்பட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கடன் என மொத்தம் 68 பயனாளிகளுக்கு 37.52 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன. 


இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, ”கொடுக்கப்பட்ட டார்கெட் முடித்து கூடுதலாக போய்விட்டார்கள். எனவே அடுத்த ஆண்டு டார்கெட் இன்னும் அதிகமாக கூடும் என நினைக்கிறேன். குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பவர்களை மட்டும் பாராமல் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும். ஒரு ஊரில் யாரேனும் இருவரை நாம் வளர்த்து விட்டால் அவர்களை முன்மாதிரியாக வைத்து கொண்டு அனைவரும் செயல்படுவர். தற்போது நாம் எட்டிய இலக்கு மட்டுமல்லாமல் தொழில்சாலை வாசனையே இல்லாத இடத்தில் இருந்து நாம் எத்தனை பேரை கொண்டு வந்துள்ளோம் என்பதை கணக்கிட்டு அதனை பரவலாக்குகின்ற நிலையை உருவாக்க வேண்டும். முதல்வர் கோவைக்கு வருகை தர உள்ளார். அப்போது இவற்றை பற்றி எல்லாம் விவரமாக பேச இருக்கிறார்.




நம் மாவட்டத்திற்கு முதல்வர் வரும்போது அனைத்து துறைகளும்  தயாராக வேண்டும், ஏற்கனவே நமக்கு வழங்கப்பட்டதை சிறப்பாக செய்திருக்க வேண்டும். புதிதாக பல விசயங்களை நாம் செய்ய வேண்டும். தொழிற்துறை மட்டுமின்றி அடிப்படையான தேவைகளையும் நாம் முதல்வரிடத்தில் கடிதமாக கொடுத்திருக்கிறோம். நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், அதனை நான் கவனிப்பதை விட வெளியில் இருப்பவர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். எனவே அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் இன்னும் நமக்கு பயனுள்ளதாக அமையும். வேலை என்று வரும் போது இந்த துறை மட்டும் தான் நமக்கு என்றில்லாமல் நம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை நாம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இது போன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிற போது இதை விட உயந்திருக்க கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். நொடிந்து போகும் சூழலில் இருக்க கூடிய தொழில்களுக்கும் நாம் தனியாக ஆய்வு மேற்கொண்டு அவர்களையும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, “முதலமைச்சர் முன்னெடுப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் செய்வதை அதிகாரிகள் கவனம் எடுத்து செய்து வருகின்றனர். தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 68 பேருக்கு 37.50 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட டார்கெட்டை விட கூடுதலாக செய்யும் வகையில் ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள பிரச்சனை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல பணிகள் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


மருதமலை கோவிலுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. அங்கு கூட்ட நெரிசல் தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும். பீக் ஹவர் மின்கட்டணம் தொடர்பாக துறை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.


பாஜக சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால்,மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இது குறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 24 ம் தேதி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பூருக்கு வருகை தர உள்ளார். கோவைக்கு முதலமைச்சர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்தார்.