கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர், ”வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கோவை மதுக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை துரிதமாக செயல்பட்டு வன ஊழியர்கள் தீயை அணைத்தனர். வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்தும், யானைகள் இறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. யானைகள் இறப்பு இயற்கையானதாக இருந்தாலும், யானைகள் தொடர் இறப்பு குறித்தும், யானைகள் மரணத்தை தடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.


வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாம்கள், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களில் தேவையான வசதிகள் மேற்கொள்ளவும், துறை சார்ந்த அதிகாரிகளுடன் கோவை, வால்பாறை, ஆனைமலை உட்பட பல பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறோம். சாடிவயல் உட்பட யானை முகாம்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழக யானை பாகன்களை பயிற்சிக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக தாய்லாந்து அழைத்து சென்றோம். யானை பாகன்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


யானைகள் இறப்பு இயல்பானது, அது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து செய்தியாகும் போது பூதாகரமாகிறது. வனப்பகுதியில் தொங்கும் மின் கம்பிகள், போஸ்ட் மரங்கள் போன்றவற்றை சீர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் போஸ்ட் கம்பங்களில் உரசுவதை தவிர்க்க கம்பங்களை சுற்றி முள்வேலி கட்டி வைத்து இருக்கின்றோம். ஆண்டுதோறும் யானைகள் மரணம் இருக்கிறது. இயற்கைக்கு மாறான மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு முறையில் ரயில் பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் யானைகளின் வலசை வழிப்பாதை என்பதை நிர்ணயிக்கவில்லை. அது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்றது.
புதுப்புது தொழில்நுட்பங்கள் வர வர அதற்கு ஏற்ப வனத்துறையில் அப்டேட் செய்து வருகிறோம். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனத்துக்குள் சாலை அமைத்து இருப்பது தவறானது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண