கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய மினி பஸ்

மழை நீர் தேங்கி இருப்பதை சரிவர கவனிக்காமல் சென்ற ஒரு தனியார் மினி பேருந்து மழை நீரில் சிக்கியது. இதனால் அந்த பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் நிலவி வந்தது. கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை நேரத்தில் சாரலுடன் துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கோவை மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், வெள்ளலூர், சுந்தராபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

Continues below advertisement

இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. ரயில் நிலையம் பகுதியில் சாலையில் வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களிலும், ரயில்வே சுரங்கப் பாதையிலும்,மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்து இருப்பதால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக நல்லாம்பாளையம் முதல் கவுண்டம்பாளையம் செல்லும் ரயில்வே மேம்பால பகுதியில் மழை நீர் தேங்கியது. மழை நீர் தேங்கி இருப்பதை சரிவர கவனிக்காமல் சென்ற ஒரு தனியார் மினி பேருந்து மழை நீரில் சிக்கியது. இதனால் அந்த பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தை மீட்டனர். 


இதேபோல கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிவேக மோட்டர் பொருத்தி மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் பொருத்திய வாகனம் மூலம் உறிஞ்சி நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகர பகுதியில் உள்ள மேம்பால கீழ்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் தடை விதித்து மாற்று வழியில் வாகனத்தை இயக்க அறிவுறுத்தி வருகின்றனர். கோவையில் மழைக்காலங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும், மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola