கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் செயல்பாடு ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  துவக்கி வைத்தார். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் ரூ.13.75 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 12 கோடி ரூபாய் செலவில் PET - CT SCAN ஐ மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 1.5 கோடி ரூபாய் செலவில், இருதய ரத்தக் குழாய் அடைப்புகளை ஸ்டென்ட் வைத்ததைச் சரிபார்க்க பயன்படும் OCT எனப்படும் கருவி இருதயவியல் துறை கேத் லேப் மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.




அப்போது பேசிய அவர், ”மழைகாலத்தில் பரவக்கூடியது தான் புளு வைரஸ். இந்த காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் இறுதி மாதம் வரை காய்ச்சல் முகாம் நடத்தப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி எவ்வளவு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதை அவரை கண்காணிக்கும் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். அவருக்கு மனஅழுத்தம் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் இருக்கிறது. இரண்டு கால்கள் மரத்து போவதால் தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டி இருக்கிறது. அதேபோல் அவருக்கு நடந்தால் மயக்கம் வருகிறது. அவருக்கு இன்னும் இரண்டு , மூன்று நாட்களில் மருத்துவ பரிசோதனை முடியும்.


அதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் நலமுடன் இருக்கிறார். சம்பந்தபட்ட மருத்துவமனை நிர்வாகிடம் பேசினேன். அவருக்கு ஏற்கனவே உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், கொஞ்சம் மூச்சு திணறலும், தொடர் இருமலும் இருப்பதால் அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் போது அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. அவர் நலமுடன் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்