கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமப்பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் ரேஷன் கடையை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசிகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டது. தொடர்ந்து கிராமத்திற்குள் படையெடுக்கும் யானைகளால் விவசாய பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தொடர்ந்து யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில யானைகள் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை கரடிமடை அருகே உள்ள மங்களப்பாளையம் கிராமத்தில் குமார் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் ஒரு யானை கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வெளியேறி உள்ளது. எனினும் தோட்டத்திற்குள் யானை பிளிரும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இதனை அடுத்து அங்கு சென்று பார்த்த போது விவசாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று தவறி விழுந்து சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மதுக்கரை வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் மதுக்கரை வனச்சரகர் சந்தியா தலைமையிலான வனத்துறையினர் அதிகாலை 4.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்து பண்ணை குட்டையில் சிக்கியிருந்த குட்டி யானையை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் அந்த குட்டி யானை விரட்டப்பட்டது.
இதுகுறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், ”இரவு நேரத்தில் யானைகள் கூட்டமாக தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது தண்ணீர் குடிக்க குட்டி யானை பண்ணை குட்டையில் இறங்கிய போது, அங்கிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வரவழைக்கப்பட்டு யானை வெளியேறுவதற்காக பாதை அமைக்கப்பட்டது. இதனை அடுத்து குட்டி யானை வெளியே வந்து வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு இப்பணியை செய்தனர்” எனக் கூறினார்