வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை,விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு கோவை மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் நேற்று 37.3 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, கோவையில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையளவு இது தான்.
இதேபோல சிறுவாணி அடிவாரத்தில் 9.9 செ.மீ, பெரியநாயக்கன்பாளையத்தில் 9.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 101.3 செ.மீ மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேட்டுப்பாளையம் உட்பட மொத்தம் 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருகிறது. குறிப்பாக சித்திரைச்சாவடி அணைக்கட்டு, புட்டுவிக்கி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதேபோல கோவை குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுவதால், நொய்யல் ஆற்றை கடக்கும் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், மேலும் அப்பகுதியில் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல கோவை இக்கரை போளூவாம்பட்டி அடுத்த நரசிபுரம் செல்லும் வழியில் சின்னாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இப்பகுதியில் ஆற்று ஓரத்தில் வைக்கப்பட்ட கண்டனர் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கோவையில் பல இடங்களில் நொய்யல் ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ள நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.