எதை கையில் எடுக்கிறார்களோ, அது அவர்களுக்கே திரும்பி வரும் என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு வீசியதற்கு அமைச்சர் கே.என். நேரு கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் கழிப்படத்தில் உள்ள புகார்களை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க ஏதுவாக அமைக்கபட்டுள்ள QR Code வசதியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நீலகிரிக்கு என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டுமோ, அதை முதலமைச்சர் அனுமதியுடன் செய்து தரப்படும். கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சாலைகளை சீரமைக்க வேண்டுமென கேட்டார். அதற்காக 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்க 200 கோடி ரூபாய் வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுள்ளார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகை சாலைகளை சீரமைக்க ஒதுக்கீடு செய்யப்படும்.
கோவையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க 200 கோடி ரூபாயும், பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்க 30 கோடி ரூபாயும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு இலகுரக வாகனங்கள் வாங்க 18 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கு 309 கோடி ரூபாயும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சத்தி சாலையில் உள்ள குப்பைக் கிடங்க மறு சீரமைப்பு செய்ய 3.5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்புகடை சாரமேடு பகுதிகளை மேம்படுத்த 16 கோடி ரூபாயும், சங்கனூர் பள்ளம் வரை மழைநீர் வடிகால் அமைக்க 9 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க மொத்தம் 1600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக 500 கோடி ரூபாயில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் கூடுதல் திட்டங்களை முதலமைச்சர் அனுமதியுடன் நிதி பெற்று செயல்படுத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு மாநகராட்சி கழிப்பிடங்களிலும் கழிவறை சுத்தமாக இருக்ககிறதா அல்லது பழுடைந்துள்ளதா என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பும் வகையில் QR code வசதி செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு எறிந்தது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், “எதை கையில் எடுக்கிறார்களோ, அது அவர்களுக்கே திரும்பி வரும். அதையே அனுபவிப்பார்கள்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர் “எதை எடுத்தாலும் மத்திய அரசு ஒரு சட்டம் போடுகிறார்கள். அதுபடி நடந்தால் தான் பணம் தருவோம் என்கிறார்கள்” என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்