கோவை அருகே இளைஞர்களிடம் தேசபக்தியை விதைக்கும் முயற்சியாக கட்டப்பட்டு வரும் தேசபக்தி கோட்டை திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.


ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாடு விடுதலை பெற்று, 75 வது ஆண்டுகளாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாட்டை மீட்பதற்காக பல சுதந்திர போராட்ட வீரர்கள் சொல்லில் அடங்கா தியாகங்களை செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தையும், வீரத்தையும், தேச பக்தியையும் நினைவு கூற வேண்டும். இதற்காக சுதந்திர தின விழா தினங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கூறப்பட்டு வருகின்றனர்.




இந்நிலையில் கோவையில் இளைய தலைமுறையினரிடம் தேச பற்றை விதைக்கும் முயற்சியாகவும், நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களையும் நினைவு கூறும் விதமாகவும் ஜெய்ஹிந்த் என்ற அறக்கட்டளை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிரந்தரமாக சுதந்திர அடையாளத்தை பேணிக் காக்கும் விதத்தில் கோவை - பாலக்காடு சாலையில் உள்ள க.க.சாவடி பகுதியில், 1.5 ஏக்கரில் 'தேசபக்திக் கோட்டை' என்ற பிரமாண்டமான கோட்டையை இந்த அறக்கட்டளை, கோவை லயன்ஸ் கிளப் உடன் இணைந்து கட்டி வருகிறது.




இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 150 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் நிரந்தரமாக வைக்கப்பட உள்ளது. இது நிரந்தரமான கண்காட்சி மையமாகவும் அமைய உள்ளது. செங்கோட்டை வடிவமைப்பில் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை நுழைவாயில் முன்பு 75 அடி உயரமுள்ள கம்பத்தில் 24 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட தேசிய கொடி பறக்க விடப்பட உள்ளது. மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது முதல் அவர்கள் விடுதலைக்குப் பின்பு வெளியே சென்றது வரையிலான சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு உள்ளிட்டவைகளும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. 




இதுகுறித்து ஜெய் ஹிந்த் அமைப்பின் தலைவர் நந்தகுமார் கூறும் போது, ”மாணவர்களும், இளைய தலைமுறையினருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், தேச உணர்வையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேசபக்தி கோட்டையை அமைத்துள்ளோம். இதுவரை 3 கோடி ரூபாய் இந்த கோட்டைக்காக செலவு செய்துள்ளோம். நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை ஒட்டி, திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்தக் கோட்டையை பொது மக்கள் இலவசமாக பார்வையிடலாம். நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் படங்கள் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. 




இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் பல்வேறு சூழல்களில் திசை திரும்பும் நிலையில் சுதந்திரம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் ஆகியவற்றை பறை சாற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும். நாளை இந்த தேசப்பக்தி கோட்டை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.” என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண