டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். 88-வது முறையாக குறுவை, சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். 120 அடி நிர்ணயிக்கப்பட்ட நீர் மட்டத்தில் இன்றைய நிலவரப்படி 96.8 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளது. 93.4 டி.எம்.சி மொத்த கொள்ளளவில் தற்போதைய நீர் இருப்பு 60.77 டி.எம்.சி ஆக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1181 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.




மேட்டூர் அணை வரலாற்றில் 88 ஆவது முறையாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் ஜூன் 12ம் தேதி வரை 17 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு சேர்த்து 18வது முறையாக திறக்கப்படுகிறது. ஜூன் 12ம் தேதி முன்னதாக 10 முறை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால் 60 முறை காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு தொடர்ந்து 438 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்தது. வழக்கமாக சாகுபடிக்கு சுமார் 330 டிஎம்சி தண்ணீர் தேவை. கடந்த ஆண்டு நீர் மேலாண்மை திட்டம் மூலம் 210 டிஎம்சி தண்ணீரிலேயே சாகுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக கோடை காலத்திலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையவில்லை. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும்.




இன்று திறக்கப்படும் தண்ணீர் 16 ம் தேதி அல்லது 17 ம் தேதி கல்லணையை சென்றடையும். கல்லணை சென்றடையும் தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள்; 36 கிளை ஆறுகள் மற்றும் 26 ஆயிரம் கால்வாய்கள் வாயிலாக டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன. நடப்பு ஆண்டில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வரும் 14ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். 



அணை திறக்கப்படுவதையொட்டி முன்னதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்டா பகுதிகளில் நடைபெறும் தூர்வாறும் பணிகளை ஆய்வு செய்தார்.  


 


 



மேலும் மேட்டூர் அணை திறப்பையொட்டி சி.டபிள்யூஎம்.ஏ.,க்கு ஆலோசனை வழங்கவும் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.