கூட்டத்துக்கு எதிர்ப்பு..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் மெகரீபா பர்வீன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 8 வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வளர்ச்சிக் பணிகளுக்கான டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, நகர்மன்ற கூட்டம் தலைவர் மற்றும் ஆணையர் கூட்டத்தை முடித்து வைத்தனர். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் தீர்மானங்கள் மீது விவாதம் எதுவும் நடைபெறாமல் கூட்டத்தை முடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்து நகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து 2 பெண் உறுப்பினர்கள் உள்பட 8 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி தலைவர், ஆணையர், வருவாய் கோட்டாட்சியர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் எந்த உடன்பாடும் எட்டப் படாத நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சிக்கிய உணவு..
கடந்த 21ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்ட அரங்கில் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக காவல் துறையினர் நகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. காவலர் அபுதாஹீர் என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென உணவுக் குழாயில் உணவு சிக்கி அடைப்பு ஏற்பட்டது. மேலும் மூச்சு விட முடியாமல் அவர் திணறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த காவலர் என்ன செய்வது என்று தெரியாமல் உயிருக்கு போராடினார்.
முதலுதவி..
இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தாமோதரன் அருகே ஓடிச் சென்று காப்பாற்றுமாறு செய்கை காட்டியுள்ளார். இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட உதவி ஆய்வாளர் தாமோதரன் அவரை தூக்கி குலுக்கி முதலுதவி செய்து அவரின் உயிரைக் காப்பாற்றினார். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சியை நகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் துரிதமாக செயல்பட்டு காவலரின் உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் தாமோதரனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து வீடியோ சமூக வலை தளங்களிலும் வெளியாகிய நிலையில், காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்