கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சட்ட விரோதமாக திமிங்கலத்தின் வாந்தி அம்பர்கிரிஸ் விற்பனை செய்ய உள்ளதாக திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கோவை வனத்துறையினர் மற்றும் திருப்பூர் வனத்துறையினர் வாகராயன்பாளையம் பகுதியில் உள்ள இளங்கோவன் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரது வீட்டில் திமிங்கலத்தின் வாந்தியை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 6 லட்சம் மதிப்புடைய 3 கிலோ திமிங்கல வாந்தியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனைக்காக வைத்திருந்த இளங்கோவனை வனத்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து கோவை வனத்துறை அலுவலகத்திற்கு இளங்கோவனை அழைத்து வந்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரள மாநிலத்தில் வேறு ஒரு நபரிடம் இதை வாங்கி விற்பனை செய்ய வைத்திருந்ததும், ஏற்கனவே இதனை சென்னையில் விற்க முயன்ற நிலையில் அங்கு விற்பனை செய்ய முடியாததால் இடைத்தரகர்கள் மூலம் கோவையில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், திமிங்கலத்தின் வாந்தி ஒரு வித ரசாயனத்தை கொண்டதாகும். இதனை வெளிநாடுகளில் வாசனை திரவியத்திற்கு பயன்படுத்துவது தெரிய வந்ததுள்ளது. மேலும் இவை லட்சக்கணக்கான மதிப்புடையவை என்பதால், இதனை பலர் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். திமிங்கலத்தின் வாந்தியை போன்று செயற்கையாக உருவாக்கி போலியாகவும் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே யானை தந்தம் கடத்திய வழக்கில் கேரள வனத்துறையினர் இளங்கோவனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
திமிங்கல வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் என்பது எண்ணெய்த் திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். எண்ணெய்த் திமிங்கிலம் பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் போது, அதன் ஓட்டை செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர் கிரீஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர் கிரீசை சிலசமயம் எண்ணெய்த் திமிங்கிலங்கள் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் திமிங்கல வாந்தி வெளியிடும் எண்ணெய்த் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. அதனால் திமிங்கல வாந்தியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.