கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே குடும்ப நண்பராக பழகி வந்தவரை வீட்டிலேயே வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாவட்டம்  கோவில்பாளையத்தை அடுத்துள்ள விஸ்வாசபுரம் டெக்ஸ்டூல் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். 47 வயதான இவர் மனைவி பிரேமா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கார்த்திகேயனுக்கு சொந்த ஊர் திருவையாறு. இவர் கோவை கணபதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பிரேமா விளாங்குறிச்சி பகுதியில் உள்ள சத்துணவு மையத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். 


இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக பிரேமாவிற்கும், கோவை கணபதி பகுதியில் தங்கி இருக்கும் ஜெகன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. ஜெகனின் சொந்த ஊரும் திருவையாறு என்பதால், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்ப நண்பர்களாக மாறினர். கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி ஜெகன் வந்து சென்றார். இந்நிலையில் தான் பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஜெகனுக்கு வேலை வாங்கி கொடுத்தார் கார்த்திகேயன். 


 



ஜெகன்


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன் வீட்டிலேயே ஜெகன் தங்கியுள்ளார். மேலும் ஜெகன் தன்னுடைய பாஸ்போர்ட்டை கார்த்திகேயன் மனைவி பிரேமாவிடம் கொடுத்து வைத்திருந்தார். அந்த பாஸ்போர்ட்டை திரும்ப கேட்ட போது, அதை  எங்கே வைத்தோம் என தெரியாமல் தேடி வந்தார். இது தொடர்பாக கார்த்திகேயனுக்கும் ஜெகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனும், ஜெகனும் நேற்று மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு வந்து ஜெகன் படுத்து இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகேயன் அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெகனைத் தாக்கினார். இதில் தலை முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ஜெகன் உயிரிழந்தார். 


இது தொடர்பாக அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் கோவில்பாளையம் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வருவதற்குள் தனது குடும்பத்தினருடன் கார்த்திகேயன் அங்கிருந்து தலைமறைவானார். ஜெகனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தனது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு தப்பிச் செல்வதற்காக கார்த்திகேயன் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கார்த்திகேயனை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் கார்த்திகேயனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டார்.