கோவைக்கு வருகை தந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், 'சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


கோவை பந்தயச் சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பந்தாரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே கோவைக்கு வருகை தந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 




அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சுவரொட்டிகளில் உள்ள வாசகங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



இதனிடையே பந்தயசாலை பகுதியில் நடைபெற்ற நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”பாரம்பரியமான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த தான் சட்டம் படிக்கவில்லை என்றாலும், சட்டம் மற்றும் நீதித்துறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நிகராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 


ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதிமன்றத்துக்கு தான் உள்ள நிலையில், நீதித்துறைக்கு போதிய நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தமிழக பட்ஜெட்டிலும் நீதித் துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்துவது அவசியமாக உள்ளது. முதல்வரும், நான் பொறுப்பு வகிக்கும் நிதித் துறையும், நீதித் துறை கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண