தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல துடியலூர் பகுதியில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனையும், காந்திபுரம் பகுதியில் லாட்டரி அலுவகமும் இயங்கி வருகிறது.


இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இந்த இடங்களில் கடந்த 12 ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 4 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வந்த நிலையில், இன்று காலை சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.




இதுதொடர்பாக மார்ட்டின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 12 காலை 7 மணி முதல் 16 ம் தேதி காலை 10 மணி வரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள எங்களது குழும நிறுவனங்களில் அமவாக்க துறையால் சோதனை நடத்தப்படவில்லை. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இயங்கி வரும் வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்தினர். இதற்காக எங்கள் நிறுவனங்களின் அதிகாரிகள்ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர்.


சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) விதிகளின் கீழ் அமலாக்க துறையினரால் சோதனை நடத்தப்பட்டது என்று பல்வேறு செய்தி சேனல்கள், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் உண்மைக்கு மாறான, அவதூறான பல்வேறு தகவல்களை செய்தியாக வெளியிட்டுள்ளனர். செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டது என ஊடகங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானதும் மற்றும் பொய்யானதும் ஆகும்.

சட்டப்படி அந்தந்த மாநில லாட்டரி விதிகளுக்கு இணங்க
, இந்தியாவில் லாட்டர் வர்த்தகத்தை ஒழுங்கமைக்கவும், நடத்தவும் மாநில அரசுகள் பெற்றுள்ள அதிகாரத்தின் படியும், இயற்றப்பட்ட விதிகளின்படியும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு எங்கள் நிறுவனங்கள் இந்தியாவில் மாநில அரசாங்க லாட்டரிகளை லாட்டரி வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் விற்கின்றன. மேலும் மாநில அரசுகளால் அரசிதழில் வெளியீட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இணங்க விதிகளின்படி செயல்பட்டு வருகிறது.


மார்ட்டின் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகமாக தனிநபர் வருமான வரியாக தோராயமாக ரூ.100 கோடியை செலுத்தியுள்ளார். எங்களது குழும நிறுவனங்கள் ஜூலை, 2017 முதல் செப், 2023 வரை ஜி.எஸ்.டியாக ரூ.23,119 கோடிகள் மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடிகளை ஜி.எஸ்.டி வரியாக செலுத்தியுள்ளனர். இதுவரை வருமான வரியாக ரூ4,577 கோடிகள் மற்றும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியாக சுமார் ரூ.600 கோடிகளை இந்திய அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளனர். இதனை சோதனையின் போது அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகிறோம். ஆனால் வருமான வரித்துறை சோதனை தொடர்பான உண்மைகளை மிகைப்படுத்தி, தவறாக சித்தரித்து மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விபரங்களை செய்தியாக வெளியீடுவது எங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களிடத்தில் எங்களைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.