கோவையில் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது.


தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல துடியலூர் பகுதியில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனையும், காந்திபுரம் பகுதியில் லாட்டரி அலுவலகமும் இயங்கி வருகிறது.




இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இந்த இடங்களில் கடந்த 12 ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக வருமான வரி செலுத்தப்பட்டு உள்ளதா, வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 4 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வந்த நிலையில், இன்று காலை சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


ஏற்கனவே லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனின், அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கேரளாவில் இருந்து வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்த்ததில் 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த நிலையில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.