கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்” எனப் பேசினார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த கருத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலரும் தங்கள் கருத்துக்களை #தமிழ்நாடு என குறிப்பிட்டு பதிவு செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு வாழ்க” என பல்வேறு மொழிகளில் பதிவிட்டார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக் கொண்டு இருந்த போது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 




இதனிடையே கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் “தமிழ்நாடு வாழ்க” என போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் கோவை மத்திய மாவட்டம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் ’தமிழ்நாடு வாழ்க’ என்ற வாசகமும், அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பாரதியார் போர் வேடம் அணிந்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண