நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயிரிழந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முதுமலை புலிகள் காப்பகட்த்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் சுற்றி திரிந்த 30-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பதை அறிய, உயிரிழந்த காட்டுப் பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் காரணமாக காட்டுப் பன்றிகள் உயிரிழந்து இருப்பது உறுதியானது. இதையடுத்து உயிரிழந்த பன்றிகளின் உடல்கள் அங்கேயே தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் அச்சபட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவலை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதேபோல கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து பன்றிகள் கொண்டு வரவும், பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கால்நடை சம்பந்தப்பட்ட கனரக வாகனங்களுக்கு கிருமிநாசிகள் தெளித்தும், சாலைகளில் பிளீச்சிங் பவுடர் கொட்டியும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள எட்டு சோதனை சாவடிகளிலும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பன்றி பண்ணைகளைச் சுற்றி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள தடுப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும், பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் திடீரென இறந்தால் துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத வளர்ப்பு பன்றி பண்ணையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பன்றி கறி விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்