கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலங்குளத்தில் சுற்றுலா துறையின் படகு சவாரி செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு வரும் பொது மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வாகனம் நிறுத்துவதற்கான இடம் இல்லாததால் அவதிக்குள்ளாகினர். இதற்கு தீர்வாக வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் இது குறித்தான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்கவும், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக செய்து கொடுப்பதாக அமைச்சர் ராமசந்திரன் உத்தரவாதம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”திராவிட மாடல் ஆட்சியில் சுற்றுலாத் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுற்றுலாத் துறை இந்தியாவிலேயே உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் முதலிடத்திலும், அயல்நாடு சுற்றுலா பயணிகள் இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. அதை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான பணிகளை நாம் செய்து வருகிறோம்.


உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தி தருகிறோம். இதனால் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் செய்து கொடுத்து வருகிறது. அதன் வகையில் கோவை வாலங்குளத்தில் படகு சவாரி போன்றவை செய்துள்ளோம். ஆனால் வாகனம் நிறுத்துவதற்கு இடம் இல்லை. அது அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பரிந்துரை செய்துள்ளனர். சுற்றுல்லா துறை லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கூடுதலான லாபத்தில் இயங்கி வருகிறது என்றார்.  


அதிகமான வருமானம் வந்தால் வருமான வரி கட்ட வேண்டும். அதற்கு பதிலாக நம் மக்களுக்கு பயன்படுத்தினால், மக்கள் பயன்படுத்துவார்கள். படகு சவாரி கட்டணம் அதிகமாக இருப்பது குறித்து ஆய்வு செய்து குறைப்பதற்கான ஆய்வு செய்கிறேன். மேலும் காலத்திற்கு ஏற்ற மாதிரி கட்டணத்தை கேட்க வேண்டும். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் கட்டணம் பெரிதாக தெரியாது. குறிச்சி குளத்தில் படகு சவாரி குறித்து ஆய்வு செய்த பிறகு நான் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போய்விடும் என்ற பிரதமர் மோடியின் கருத்து குறித்த கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் திமுக இருக்காதா? இல்லையா? என்பது மக்களுக்கு தெரியும். பாஜக இருக்காதா? திமுக இருக்காதா? என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்” என்றார். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக நிச்சயமாக வெற்றி அடையும். எந்த சந்தேகமும் வேண்டாம். அதிமுக சவால் விட்டாலும் ஆ.ராசா தான் நிச்சயமாக வெற்றி பெறுவார் எனத் தெரிவித்தார்.